பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது
அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்த தகவல்கள் இன்னமும் உரியவாறு வெளியிடப்படவில்லை.
நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில்கூட, அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது.
பொருளாதார மீட்சிக்கான சாத்தியப்பாடு சூனியமாக இருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்று வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.
அரசாங்கத்தினால் கடந்த 2022 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்ட கொள்கைகள் உரியவாறு பின்பற்றப்படுகின்றனவா என்ற மதிப்பீட்டை வெரிட்டே ரிசேர்ச் அமைப்பு மேற்கொண்டுள்ளது.
அதன் ஓரங்கமாக சுகாதாரம் மற்றும் மருத்துவம், உணவு மற்றும் விவசாயம், எரிபொருள் மற்றும் சக்திவலு ஆகிய மூன்று முக்கிய துறைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 15 அமைச்சரவைத்தீர்மானங்கள் மற்றும் முன்மொழிகள் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாகக்கொண்டு வெரிட்டே ரிசேர்ட் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
அண்மையில் இலங்கையின் தனிநபர் வருமானவரிக்கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் பொதுமக்களின் கடும் விமர்சனத்துக்குள்ளானது.
வரி செலுத்துவோரின் பணத்தை அரசாங்கம் உரிய முறையில் பயன்படுத்தாது என்ற அவநம்பிக்கை அதற்கு அடிப்படையாக அமைந்தது.
அவ்வாறிருக்கையில் முன்மொழியப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய தகவல்களை வெளியிடுவதற்கு அரசாங்கம் மறுத்ததன் விளைவாக இந்த அவநம்பிக்கை மேலும் வலுவடைந்துள்ளது.
அத்தகைய தகவல்களைப் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தாமல் இருப்பதென்பது, கொள்கை அமுலாக்கத்தில் தாமதமேற்படுவதற்கும் அரச நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதற்கும் வழிவகுக்கும்.
பொதுமக்களின் வசதியை முன்னிறுத்தி செயற்படுவது அனைத்து அமைச்சுக்களினதும் செயலாளர்களின் முக்கிய கடமை என்றும், அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களிலும் செயற்திறன்மிக்க பதிலளிக்கும் கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என்றும் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும் நாம் முன்னெடுத்த மதிப்பீட்டின்படி, அரசாங்க நிறுவனங்கள் தாம் பெறும் தகவல் கோரிக்கைகளுக்குப் பதிலளிப்பதற்குப் பெரும்பாலும் தயாராக இருப்பதில்லை என்ற விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கின்ற சூழ்நிலையில்கூட, அரசாங்கத்தின் கொள்கைத்தீர்மானங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலின்மை தொடர்கின்றது.
அரசாங்கம் மிகையான பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதே அண்மையில் நாட்டில் இடம்பெற்ற பொதுமக்கள் போராட்டங்களின் முக்கிய கோரிக்கையாகக் காணப்பட்டது.
எனவே இவற்றுக்கு மத்தியிலும்கூட அரசாங்கம் அதற்கேற்றவாறு மாற்றமடைவதற்கான நாட்டத்தைக் காண்பிக்காமை பொருளாதார மீட்சிக்கான சாத்தியப்பாடு சூனியமாக இருப்பதையே வெளிப்படுத்துகின்றது என்று அவ்வமைப்பு விசனம் வெளியிட்டுள்ளது.