கோவிட் தொற்றால் யாழ்ப்பாணத்தில் மீண்டும் மரணம் பதிவானது
கோவிட் தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணத்தில் மீண்டும் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் சிகிச்சையில் இருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அதற்குரிய தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் நீர்வேலிப் பகுதியைச் சேர்ந்த முதியவரே உயிரிழந்தார். அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டிருப்பது ஏப்ரல் 15 ஆம் திகதி உறுதி செய்யப்பட்டது.
அவர் கடுமையான மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும், தொற்றின் தீவிரம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் உடலம் மூடிச் சீல் வைக்கப்பட்டு உறவுகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு சடலம் வெளியே எடுக்கப்பட்டு சடங்குகள் செய்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டது.
கொரோனாப் பெருந்தொற்று பாதிப்பு, தடுப்பூசிகளைத் தொடர்ந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் கொரோனா அறிகுறியுடன் 5 பேர் இந்த மாதம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.