கொழும்பில் நடந்த கொலை – மன்னாரில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
சுரேந்திர வசந்த பெரேரா என்ற கிளப் வசந்த மற்றும் நயனா வசுலா எதிரிசூரிய ஆகியோரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மன்னாரிலிருந்து மீன்பிடி படகின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக மன்னாரில் பல இடங்களில் பாதுகாப்பு தரப்பினர் விசேட சோதனைச் சாவடிகளை நிறுவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்தேக நபர்கள் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க விமான நிலையங்கள் மற்றும் ஏனைய இடங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.
என்ற போதிலும், மன்னார் ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், கொழும்பில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில் பல விசேட சோதனைச் சாவடிகளும் வீதித் தடைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. .
மேலும், மன்னாரிலிருந்து கடலுக்குச் செல்லும் மீன்பிடி படகுகளில் மீன்பிடி அடையாள அட்டை இல்லாமல் பயணிப்பவர்கள் தொடர்பில் கடற்படை, கரையோரப் பாதுகாப்புப் பிரிவினர் மற்றும் கடற்றொழில் பரிசோதகர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.