காசா மீது தாக்குதல் ;அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் எரியும் இஸ்ரேல் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது என ஈரான் அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் இன்றுடன் 21வது நாளை எட்டியுள்ளது. கடந்த 21 நாட்களில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டதாகவும், 5,431 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், காசா பகுதியை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் வான்வழித் தாக்குதல்களில் இதுவரை 7,028 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 17,439 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருதரப்பிலும் இதுவரை 8,500க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல், தனது தரைப்படை மற்றும் டாங்கிகளுடன் காசா பகுதியில் நுழைந்துள்ளது. அப்போது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாதிகள் பலரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான், பஹ்ரைன், கத்தார், குவைத், சவூதி அரேபியா, ஓமன், எகிப்து மற்றும் மொராக்கோ ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு நடந்தது. அப்போது அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், ‘காசாவில் வசிக்கும் பொதுமக்களை குறிவைத்து இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருவது, சர்வதேச சட்டத்தை மீறும் செயலாகும். கடந்த 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாலஸ்தீனியர்களின் உரிமைகளைப் புறக்கணிப்பதையும், இஸ்ரேலின் தற்காப்பு உரிமையும் ஒன்றாக நியாயப்படுத்தாது’ என்று தெரிவித்துள்ளது. இந்தப் போரில் ஹமாஸுக்கு எதிராக தாக்குதலில் இறங்கியுள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா வெளிப்படையாக ஆதரவு அளித்துள்ளது.
அதேநேரம் காசாவில் வசிக்கும் பாலஸ்தீன மக்களுக்கு ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளன. இந்நிலையில் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹிஹானியா அளித்த பேட்டியில், ‘காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் மீதான படுகொலையை இஸ்ரேல் தொடர்ந்தால், அதன் தீயில் இருந்து அமெரிக்கா தப்ப முடியாது. பாலஸ்தீனத்தில் நடக்கும் இனப்படுகொலையை கண்காணிக்கும் அமெரிக்க அரசுக்கு, இந்த தகவலை வெளிப்படையாக அறிவிக்கிறேன். எங்களது பிராந்தியத்தில் போரை நாங்கள் விரும்பவில்லை. அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக அமெரிக்கா உழைக்க வேண்டுமே தவிர, அங்கு வசிக்கும் மக்களை போரின் நெருப்பில் தள்ளக்கூடாது. காசா மீது ராக்கெட்டுகள், டாங்கிகள், குண்டுகளை வீசுவதற்கு பதிலாக, இனப்படுகொலையை ஆதரிப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும்’ என்றார்.
முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அளித்த பேட்டியில், ‘ஈரான் உடனான போரை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் ஈரானோ அல்லது அதன் பிரதிநிதிகளோ அமெரிக்க ஊழியர்களை தாக்கினால், அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது எங்களுக்கு (அமெரிக்கா) தெரியும்’ என்று தெரிவித்தார்.
இஸ்ரேல் ராணுவம் வெளியிட்ட அறிவிப்பில், ‘காசா பகுதிக்குள் தரைவழியாக சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் பலர் கொல்லப்பட்டனர். அவர்களின் பதுங்கு குழிகள், ஆயுதகிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன. எனினும் முழுமையான தரைவழி தாக்குதலை இன்னும் தொடங்கவில்லை. இந்த நடவடிக்கையை தரைவழி தாக்குதலுக்கான ஒத்திகை’ என்று கூறியுள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ‘காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருகிறது. எப்போது, எப்படி என்பதை நான் விரிவாகக் கூறமாட்டேன். ஆனால், ஹமாசின் இலக்குகளை அழிக்க, காசா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம்’ என்றார்.
இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிவிப்பில், ‘தீவிரவாத அமைப்பான ஹமாசின் டார்ஜ் தஃபா படைபிரிவின் தளபதி ரஃபத் அப்பாஸ், துணை தளபதி இப்ராஹிம் ஜெதேவா, போர் மற்றும் நிர்வாக உதவித் தளபதி தாரேக் ஆகியோரை, இஸ்ரேல் விமானப் படை கொன்றது. கடந்த 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொலைவெறி படுகொலை சம்பவத்தில் மேற்கண்ட படைப்பிரிவுக்கு முக்கிய பங்குண்டு. முன்னதாக ஹமாசின் உளவுத்துறை இயக்குனரக துணைத் தலைவர் ஷாதி பாரூட், நேற்று வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்’ என்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நடந்து வரும் நிலையில், சிரியாவில் பதுங்கியிருக்கும் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளின் பகுதிகளின் மீது அமெரிக்கா விமானப்படை வான்வழித் தாக்குதலை நடத்தியது. வடக்கு சிரியாவில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘அதிபர் ஜோ பைடனின் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு சிரியாவில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படை மற்றும் தொடர்புடைய அமைப்புகளின் நிலைகளின் மீது அமெரிக்க ராணுவப் படைகள் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தின’ என்றார்.