அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் : முடிவை அறிவிக்க தடை விதித்த நீதிமன்றம்!
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கடந்த 9 மாதங்களாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் வருகிற 26-ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது. தொடர்ந்து இன்றும் மனுதாக்கல் நடைபெறுகிறது.
பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்துள்ள நிலையில் வேறு யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால் இன்று பிற்பகல் 3 மணிக்கு வேட்புமனு தாக்கல் முடிந்த உடனேயே பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் மற்றும் ஜே.சி.டி. பிரபாகர் ஆகியோர் தனித் தனியாக அவசர வழக்குகளை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் முறையிட்டனர்.
இதனையடுத்து இந்த வழக்கை அவசரவழக்காக விசாரணை செய்த நீதிபதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்தார். பின்னர் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடரலாம். ஆனால் தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது. அதற்கு தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் வருகிற 22ஆம் திகதி விடுமுறை தினத்தன்று விசாரிக்கப்படும் எனவும் அறிவித்தார்.