புதினுடனான அழைப்பை அடுத்து ஜெலென்ஸ்கி – ட்ரம்ப் இடையே வெள்ளை மாளிகையில் சந்திப்பு

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் மூன்று ஆண்டுகளைக் கடந்துள்ளது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தும் போர் நிறுத்தத்துக்கான நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதற்கிடையே, ஜனாதிபதி ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரஷ்ய ஜனாதிபதி புதினுடன் நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினேன். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஜனாதிபதி புதினை ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில்(Budapest) சந்தித்து போர் நிறுத்தம் குறித்துப் பேச திட்டமிட்டுள்ளேன். சந்திப்புக்கான திகதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இரு வாரங்களுக்குள் இந்தச் சந்திப்பு நடக்கும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்குச் சென்றார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ட்ரம்ப்பே வாசலில் வந்து அவரை வரவேற்றார்.இந்தச் சந்திப்பின்போது புதினுடன் நடந்த உரையாடல் விவரங்கள் மற்றும் உக்ரைனுக்கு ஏவுகணை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.