கொலம்பியன்(Colombian) ஜனாதிபதி மீது தடை விதித்துள்ள அமெரிக்கா
அமெரிக்காவுக்குள் போதை பொருள் கடத்தப்படுவதை தடுக்க ட்ரம்ப் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்கிடையே போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கொலம்பியா மீது ட்ரம்ப் குற்றம் சாட்டுக்களை முன்வைத்து வருகின்றார்.
கொலம்பியா ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ(Gustavo Pedro), வயல்களில் போதைப் பொருட்களின் உற்பத்தியை ஊக்குவித்து வருவதாக குற்றம் சாட்டிய ட்ரம்ப், அவர் ஒரு சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரி என்றும் அவர் போதைப் பொருளை தடுக்கவில்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொலம்பியா ட்ரம்ப் சுமத்திய குற்றச்சாட்டை மறுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில், உலகளாவிய போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாக கூறி கொலம்பிய ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோ மீது அமெரிக்கா பொருளாதார தடையை விதித்துள்ளது.
மேலும் அவரது மனைவி வெரோனிகா கார்சியா(Veronica Garcia),மகன் நிக்கோலஸ் பெர்னாண்டோ பெட்ரோ பர்கோஸ்(Nicholas Fernando Pedro Burgos) மற்றும் கொலம்பிய உள்துறை அமைச்சர் அர்மாண்டோ ஆல்பர்டோ பெனடெட்டி(Armando Alberto Benedetti) ஆகியோருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அமெரிக்காவில் உள்ள அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் எனவும், அமெரிக்கர்களுடன் அவர்கள் வர்த்தகம் செய்ய முடியாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன், கொலம்பியா ஜனாதிபதி பெட்ரோவின் அமெரிக்க விசா கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





