இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து அமெரிக்க தூதர் பாராட்டு
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை, அமைதியான சூழல் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீட்சி என்பன தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ மற்றும் அமெரிக்க தூதுவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நீதி அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நீதி நடவடிக்கை மூலம் போதைப்பொருளை ஒழிப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் முக்கியமானவை எனவும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகம் செய்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அமெரிக்க தூதுவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலக சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சருக்கும் தூதுவருக்கும் இடையில் கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு மசோதா தேவையான திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி வெளிவிவகார அமைச்சின் ஊடாக இராஜதந்திரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.