AI தொழில்நுட்பத்தால் உலகிற்கு காத்திருக்கும் பேரழிவு!
Ai தொழில்நுட்பத்தால் உலகம் எப்படி மாறப்போகிறது என புதிய எச்சரிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதனால் எத்தகைய பிரச்சினைகள் வரப்போகிறது என பல எச்சரிக்கைகள் இதுவரை வெளிவந்துள்ளது. ஆனால் இதனால் நாம் நினைத்துப் பார்க்காத வகையில் மிகப்பெரிய சம்பவம் நடக்கப்போகிறதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை வெளியிட்டது Ai துறையில் இயங்கி வரும் ஆராய்ச்சியாளர்கள், பொறியியலாளர்கள் மற்றும் பிரபலமான நிறுவனங்களின் CEO-க்கள் என்பதால், இதை நம்மால் அவ்வளவு எளிதில் கண்டுகொள்ளாமல் கடந்துவிட முடியாது. இந்த அறிக்கையை OpenAi நிறுவனர் சாம் ஆல்ட்மேன், Google DeepMind-ன் சிஇஓ டெமிஸ் ஹசாபிஸ், Microsoft சிஇஓ கெவின் ஸ்காட் உட்பட பல தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
“செயற்கை நுண்ணறிவானது மனித குலத்தையே முற்றிலுமாக அழித்துவிடும் தன்மை படைத்தது. அணுசக்தி போர்கள் மற்றும் நோய்த் தொற்று போலவே, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் மனித குலத்திற்கு ஆபத்துதான்” என இவர்கள் வெளியிட்ட எச்சரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையின் நோக்கம் Ai தொழில்நுட்பம் தொடர்பான ஒழுங்குமுறை எவ்வளவு முக்கியமானது என்பதை வலியுறுத்துவதாகும்.
இந்த அறிக்கையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் இயந்திரக் கற்றல் பேராசிரியரான ‘மைக்கேல் ஆஸ்போனும்’ கையெழுத்திட்டார். அவர் Ai தொழில் நுட்பத்தில் Existential Risk இருக்கிறது என பீதியைக் கிளப்புகிறார். அதாவது இதனால் உலகளாவிய பேரழிவை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாகக் கூறுகிறார். இந்த வார்த்தைப் பிரயோகம் மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இதை நாம் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால், அது நம் கிரகத்திலேயே நமக்கு எதிராகவே இயங்கும் ஓர் போட்டி உயிரினமாக மாற வாய்ப்புள்ளது என்றும் மைக்கேல் ஆஸ்போர்ன் கூறியுள்ளார்.
இதேபோல, கடந்த மாதம் AI தொழில்நுட்பத்தின் தந்தை எனப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், கூகுள் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஏனென்றால் எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவால் மனித குலத்திற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் என்பதை அவர் நம்புவதால், அதைப்பற்றி பொதுவெளியில் வெளிப்படையாகப் பேசவே தனது பணியை விட்டு வெளியேறியதாக அவர் கூறுகிறார்.
ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதில் தொடங்கி, நிரலாக்க மொழி வரையில் கிட்டத்தட்ட அனைத்தையுமே எளிமையாக்கும் வகையில் இது வடிவமைக்கப் பட்டிருந்தாலும், உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த டெக் நிறுவன தலைவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தின் மோசமான விளைவுகள்ப் பற்றி தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர்.
தற்போதுவரை இதனுடைய தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மக்கள் பாதிக்கப்படும்போது, இதை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.