பாகிஸ்தானில் ராணுவ முகாம் மீது தற்கொலைப்படை தாக்குதல் – 7 வீரர்கள் பலி, 13 பேர் காயம்

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்துவரும் தலிபான்கள் இருநாட்டு எல்லையில் கிளை அமைப்பை தொடங்கி பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் குற்றஞ்சாட்டி வருகிறது.
மேலும், இந்த பயங்கரவாத அமைப்பை அழிப்பதாக கூறி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில்(Kabul) பாகிஸ்தான் விமானப்படை கடந்த சில நாட்களுக்குமுன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் அரசு கண்டனம் தெரிவித்தது. தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்தது. இதையடுத்து இருநாட்டு எல்லையிலும் கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் ஆப்கானிஸ்தானில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரத்தை அந்நாட்டு அரசு வெளியிடவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தினர் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பாகிஸ்தானில் நேற்று(17) தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைபர் பக்துன்க்வா(Khyber Pakhtunkhwa) மாகாணம் வடக்கு வசிரிஸ்தான்(Waziristan) மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் நுழைந்தது. ராணுவ தளத்தின் வாயிலில் அந்த வாகனத்தை ஓட்டி வந்த நபர் அதை வெடிக்கச்செய்தார்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு தெஹ்ரீக் இ தலிபான்(Tehreek-e-Taliban) அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.