சிட்னி பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஷஸ் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு!
சிட்னி போண்டியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலையடுத்து ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளில் புலனாய்வாளர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது ஆஷஸ் டெஸட் போட்டி தெற்கு ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலெய்டில் இன்று ஆரம்பமானது.
இதனைமுன்னிட்டு தெற்கு ஆஸ்திரேலிய பொலிஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி இருந்தனர்.
ஆயுதம் ஏந்திய பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
போட்டியை பார்வையிட வந்தவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். பைகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தெற்கு ஆஸ்திரேலியாவுக்கு சமூக அச்சுறுத்தல் எதுவும் இருப்பதாக உளவு தகவல் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
எனினும், முன்னாயத்த நடவடிக்கையாகவே விசேட பாதுகாப்பு நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
மக்களின் பாதுகாப்பு கருதியே போட்டி நடைபெறும் மைதானம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகும்போது, போன்டி தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிட்னி, போண்டி கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடத்த பயங்கரவாதத் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். 42 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




