கல்வி அமைச்சின் இணையதளம் மீது சைபர் தாக்குதல் : கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அடையாளந்தெரியாத ஹேக்கர் ஒருவர் சைபர் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலை குழு (SLCERT) மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) உட்பட பல தரப்பினரால் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இணையத்தள பாவனையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்த கல்வி அமைச்சு, உத்தியோகபூர்வ இணையத்தளத்தை கூடிய விரைவில் மீளமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் இணையதளம் வியாழக்கிழமை (ஏப். 04) அடையாளம் தெரியாத ஹேக்கரால் ஹேக் செய்யப்பட்டது.
“அநாமதேய EEE” என்ற பெயரால் ஊடுருவும் நபர், கணினியில் உள்ள பாதுகாப்பு குறைபாடுகளை முன்னிலைப்படுத்தி, அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிப்புக் கேட்டு ஒரு செய்தியை அனுப்பினார்.
அக்கறையுள்ள குடிமகன் மற்றும் உயர்தர மாணவர் எனக் கூறி, ஹேக்கர், தேசிய பாதுகாப்பு நலனுக்காக இந்த மீறல் மேற்கொள்ளப்பட்டதாக வலியுறுத்தினார்.
“என் பெயர் அநாமதேய EEE மற்றும் நான் தற்போது A/l படித்து வருகிறேன். உங்கள் இணையதளத்தை அங்கீகரிக்கப்படாத அணுகலுக்கு மன்னிக்கவும் ஆனால் உங்கள் இணையதளத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளன. இலங்கைப் பிரஜை என்ற வகையில் எனது நாட்டின் பாதுகாப்பிற்காக இதனைத் தெரிவிக்கின்றேன். அதை சரிசெய்ய நன்றி” என்று கல்வி அமைச்சின் இணையதளத்தில் ஹேக்கரால் காட்டப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.