ஆப்கானிஸ்தானில் பஞ்சத்தில் தவிக்கும் மக்கள் – 4 மில்லியன் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைப்பாடு!
ஆப்கானிஸ்தானில் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரவிருக்கும் குளிர்கால மாதங்களில் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பசி நெருக்கடிகள் ஆணையமும் ஐ.நா. உணவு உதவி நிறுவனமும் இணைந்து இன்று வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட சுமார் 3 மில்லியன் அதிகம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொருளாதார துயரங்கள், தொடர்ச்சியான வறட்சி, சர்வதேச உதவி குறைந்து வருவது மற்றும் அண்டை நாடான ஈரான் மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வீடு திரும்பும் ஆப்கானியர்களின் வருகை ஆகியவை வளங்களை குறைத்து, உணவுப் பாதுகாப்பின் மீதான அழுத்தங்களை அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் சூழ்நிலையில் கிட்டத்தட்ட 4 மில்லியன் குழந்தைகள் உள்ளதாகவும், சுமார் 1 மில்லியன் பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் எனவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் 2026 வரையிலான நான்கு மாத காலத்தில் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள், அதாவது மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர், உணவுப் பாதுகாப்பின்மை நெருக்கடி நிலைகளை எதிர்கொள்ள நேரிடும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது.
அவர்களில், 4.7 மில்லியன் பேர் அவசரகால உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





