இலங்கையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியம்: கல்வி அமைச்சர் அறிவிப்பு
நாட்டிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்தும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இது குறித்து கல்வி அமைச்சும் (Ministry of Education) சமூக வலுவூட்டல் அமைச்சும் இணைந்து இந்த அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் களுத்துறை (Kalutara) மாவட்ட முன்பள்ளி ஆசிரியர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையில் 34,000 முன்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களில் 6,000 பேரே டிப்ளோமா பெற்றவர்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 18,800 முன்பள்ளிகள் உள்ளதாகவும், பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் டிப்ளோமா பெற்றவர்கள் அல்ல என்பது பாரதூரமான விடயம் எனவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவின் கேள்விக்கு பதிலளித்த அவர், மொண்டிசோரி மற்றும் முன்பள்ளி என்ற சொற்களை கூட பயன்படுத்துவது தவறானது என்றும் சரியான பதம் ஆரம்ப குழந்தை பருவ அபிவிருத்தி நிலையங்களாக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
அமெரிக்கா மற்றும் ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில், குழந்தைகளின் கல்வியின் மிக முக்கியமான கட்டமாக இருப்பதால், குழந்தை பருவ வளர்ச்சிக்கு கல்வியில் முதலிடம் கொடுக்கப்படுகிறது என்று அமைச்சர் கூறினார்.
முன்பள்ளிக் கல்வியைப் பெற வேண்டிய குழந்தைகளில் 20 வீதமானோர் கல்வி கற்க வாய்ப்பில்லை என யுனிசெஃப் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது என்றார்.