ஜப்பான் செல்லும் வழியில் பழுதடைந்த நியூசிலாந்துப் பிரதமரின் விமானம்
நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லக்சன் ஜப்பானுக்குப் பயணம் செய்த ராணுவ விமானம் ஜூன் 16ஆம் திகதி செயலிழந்ததை அடுத்து, அவர் வர்த்தக விமானத்தில் பயணத்தைத் தொடர்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
நியூசிலாந்துப் பிரதமர் அலுவலகம், ஜூன் 17ஆம் திகதி இந்தத் தகவலை உறுதிசெய்தது.
லக்சன் நான்கு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ளார். தமது பயணத்தின்போது அவர், ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிதாவைச் சந்தித்துப் பேசுவார் என்றும் நியூசிலாந்தின் வர்த்தக வாய்ப்புகளைப் பெருக்கும் முயற்சிகளை மேற்கொள்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
லக்சன் பயணம் செய்த, நியூசிலாந்துத் தற்காப்புப் படைக்குச் சொந்தமான போயிங் 757 ரக விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாப்புவா நியூ கினியில் தரையிறங்கியதாக நியூசிலாந்து ஊடகங்கள் கூறின.அது எதிர்பாராத விதமாக செயலிழக்கவே, பிரதமர் லக்சன் வர்த்தக விமானத்தில் ஜப்பான் சென்றதாகவும் அவருடன் ராணுவ விமானத்தில் சென்ற வர்த்தகப் பேராளர்களும் செய்தியாளர்களும் போர்ட் மெர்ஸ்பியில் தங்க நேரிட்டதாகவும் கூறப்பட்டது.
நியூசிலாந்துத் பாதுகாப்புப் படையிடம் உள்ள இரண்டு போயிங் 757 ரக விமானங்களும் 30 ஆண்டுகளுக்குமேல் பழைமையானவை என்றும் அதனால் அவற்றின் நம்பகத்தன்மை குறைந்து வருவதாகவும் தெரிகிறது.
நியூசிலாந்துத் பாதுகாப்பு அமைச்சர் ஜுடித் கோலின்ஸ் உள்ளூர் வானொலி நிலையத்துக்கு ஜூன் 17ஆம் அளித்த நேர்காணலில் இத்தகைய விவகாரங்கள் சங்கடம் ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
பாதுகாப்புக்கு அதிகம் செலவிட விரும்பினாலும் பொருளாதார சிக்கல்களால் செலவைக் குறைக்க வேண்டியிருப்பதாக நியூசிலாந்து அரசாங்கம் கூறியது.