குடும்பத்துடன் திருட்டில் ஈடுபட்ட நபர் கைது
குடும்பத்துடன் பேருந்துகளில் ஏறி திருட்டில் ஈடுபட்ட நபரை பொலிசார் கைது செய்தனர்.
வாதுவ பொடுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் பேருந்துகளில் ஏறி கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகளை திருடிச் சென்றுள்ளார்.
பேருந்துகளில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பணப்பைகள் காணாமல் போனமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததன் பிரகாரம், சந்தேக நபரை பிலியந்தலை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சந்தேகநபர் பிலியந்தலை மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரை கைது செய்யும் போது, அவரிடம் இருந்து 5200 மில்லிகிராம் போதைப்பொருளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பின்னர் நீண்ட நேர விசாரணைகளுக்குப் பிறகு, திருடப்பட்ட போன்கள் கல்கிஸ்ஸை, புறக்கோட்டை பகுதிகளில் மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
விசாரணையில், திருடப்பட்ட சுமார் 20 போன்களை பொலிசார் கண்டுபிடித்தனர். அந்த போன்களின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 120, 138 மற்றும் 296 வழித்தடங்களில் பேருந்துகளில் ஏறி கடந்த 6 மாதங்களாக இந்த திருட்டுகளை செய்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.