இலங்கையில் புதிய வீடு நிர்மாணிக்க காத்திருப்பவர்களுக்கு முக்கிய தகவல்
இலங்கையில் புதிய வீடு நிர்மாணிக்கும் போது சூரியன் இருக்கும் திசையையும் கருத்திற்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார்மேற்பார்வை குழுவில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார்மேற்பார்வை குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.
அதற்கமைய, புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் போது அதில் சூரியப் படலங்களை (Solar Panels) பொருத்துவதற்கான இடத்தை திட்டமிடுவது குறித்து குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மாகாண மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், மேற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இங்கு வருகைதந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
ஆனால் வாஸ்து சாஸ்திரத்திற்கமைய எமன் இருக்கும் திசை குறித்து மக்கள் கருத்திற்கொண்டாலும், சூரியனின் திசை குறித்து மக்கள் கருத்திற்கொள்வதில்லை என அதிகாரிகள் மேலும் சுட்டிக்காட்டினர். சூரியப் படலங்களைப் பொருத்தும் இந்த நிலைமை சிக்கலாக மாறியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், இந்நிலைமை குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தி, சூரியப் படலங்களைப் பொருத்துவதற்கு மக்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.