31 ஆம் திகதிக்குள் செய்து முடிங்கள்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
“ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் இன்று (20) நடைபெற்றது.
பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மீன்பிடி, போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளைச் சேர்ந்த அமைச்சுகளின் செயலாளர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
வீடுகளை சுத்தம் செய்வதற்கு அரசாங்கம் வழங்கும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு வழங்கும் 50,000 ரூபா என்பவற்றை டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.
மேலும், வீடுகள் மற்றும் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்குதல் தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது.
மக்களை மீளக் குடியமர்த்தல்,வாழ்வாதாரங்களை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாவட்ட அளவில் மேற்கொள்ளப்படும் வேலைத் திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் ஆகியவை குறித்தும் விரிவாக ஆராயப்பட்டன.
இழப்பீடு வழங்கும் செயல்பாட்டில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அந்தப் பணிகளை செயற்திறனுடன் முன்னெடுக்கவும் எவரையும் கைவிடாத வகையில் இழப்பீடு பெற உரிமை உள்ள அனைவருக்கும் அதனை வழங்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
பேரிடரால் சேதமடைந்த கடவுச்சீட்டுகள் மற்றும் அடையாள அட்டைகளை மீண்டும் வழங்குவதற்கான வேலைத்திட்டம் குறித்தும் ஜனாதிபதி கேட்டறிந்தார்.





