கொழும்பில் பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு தப்பிச் சென்ற நபர்
கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேகத்திற்கிடமான சாரதி சில மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் ஜனவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரபல டாக்சி நிறுவனம் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரியும் 40 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரால் பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த 29 ஆம் திகதி கொழும்பு 05 ஹெவ்லொக் டவுன் பகுதியில் வஜிர வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த கான்ஸ்டபிள் சந்தேக நபரின் காரை நிறுத்தி அதன் ஆவணங்களை சரிபார்க்குமாறு கூறியுள்ளார்.
கான்ஸ்டபிள் வாகனத்தின் உள்ளே கையை வைத்து ஆவணங்களை எடுக்க முற்பட்ட போது, டிரைவர் காரின் பக்கவாட்டு கண்ணாடியை உயர்த்தினார்.
சுமார் இருநூறு மீற்றர் தூரம் காரை ஓட்டிச் சென்ற சந்தேக நபர், பொலிஸ் கான்ஸ்டபிளை அருகிலிருந்த காரில் மோதச் செய்து, அவரை ஆபத்தில் ஆழ்த்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
படுகாயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.