சின்ன ஸ்பூன், ஈரானின் மிகப்பெரிய சாதனை : கின்னஸ் அங்கீகாரம்
ஈரானியர் ஒருவர் 88 ஸ்பூன்களை தனது உடலில் விழாமல் வைத்து தனது உலக சாதனையை தானே முறியடித்துள்ளார்.
கின்னஸ் உலக சாதனை அமைப்பு மனிதர்களின் அசாதாரண சாதனைகளை ஆவணப்படுத்தவும், அந்த சாதனைகளை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ள உதவவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்த உலக சாதனைகளில், உணவு தொடர்பான சாதனைகள் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளன. உணவில் மட்டுமின்றி, உணவுக்கு பயன்படும் கருவிகளாலும் மக்கள் உலக சாதனைகளை அவ்வப்போது சாதித்து வருகின்றனர். அந்த வகையில் ஈரானைச் சேர்ந்த ஒருவர் புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
ஈரானின் கராஜ் நகரைச் சேர்ந்தவர் அபோல்பாசில் மொக்தாரி. சட்டையின்றி உடலில் விழாமல் 88 ஸ்பூன்களை பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், 2022 இல் விழாமல் 85 ஸ்பூன்களை வைத்திருந்த தனது சொந்த சாதனையை மொக்தாரி முறியடித்தார்.
தனது கின்னஸ் சாதனை குறித்து அவர் கூறும்போது, “எனது உடலில் இருந்து சிறிது ஆற்றலை கரண்டிகளில் செலுத்தி, விழாமல் தூக்கி வைத்து இந்த சாதனையை படைத்துள்ளேன். ஒவ்வொரு ஸ்பூன் என் உடலில் வைக்கப்படும் போது, நான் என் கவனத்தை அவற்றின் மீது செலுத்துகிறேன். என் உடலில் உள்ள கரண்டிகளை நான் எவ்வளவு அதிகமாக உணர்கிறேனோ, அவ்வளவு கரண்டிகள் விழுவதை நிறுத்துகின்றன. இதுவே எனது சாதனை வெற்றியின் ரகசியம்”என்றார்.