பிக் பாஸ் செட்டில் வைத்து போட்டியாளர் அதிரடி கைது.. நடந்தது என்ன?
பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் கன்னடத்தில் தற்போது சீசன் 10 நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளராக வர்தூர் சந்தோஷ் கலந்து கொண்டுள்ளார்.
இவர் தனது கழுத்தில் புலி நகம் அணிந்து இருந்த குற்றச்சாட்டின் படி ஞாயிற்றுக்கிழமை இரவு வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் படி வனத்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்தூர் சந்தோஷ் விவசாயம் செய்து வருகிறார். மேலும், இவர் கால்நடைகளை வளர்த்து வருகிறார். ஹல்லிகர் பசுக்களின் பாதுகாப்புக்காகப் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். அகில இந்திய ஹல்லிகர் இன பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் உள்ளார்.
ஹல்லிகர் பசுக்களைப் பாதுகாப்பதில் அவர் மேற்கொண்ட முயற்சிகள் பல்வேறு நிகழ்வுகளில் அவருக்கு அங்கீகாரத்தையும் மரியாதையையும் பெற்றுத் தந்துள்ளன. இந்த நிலையில் தற்போது, கன்னடத்தில் நடைபெற்று வரும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டு இருந்தார்.
வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட வர்தூர் சந்தோஷ் தற்போது வனத்துறை அதிகாரிகளின் காவலில் உள்ளார். மேலும், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தினை மீறி கழுத்தில் புலி நகம் அணிந்திருந்த வர்தூர் சந்தோஷ் மீது புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வர்தூர் சந்தோஷை வனத்துறையினர் கைது செய்து, அவர் அணிந்திருந்த புலி நகம் கொண்ட செயினை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வனத்துறை அதிகாரிகள் கன்னட பிக் பாஸ் வீட்டிற்குச் சென்று வர்தூர் சந்தோஷை வீட்டிற்கு வெளியில் அழைத்து வரும்படி நிகழ்ச்சி நடத்துநரிடம் தெரிவித்து அவரை வெளியில் அழைத்து வந்து அவர் அணிந்து இருந்திருந்தது உண்மையான புலி நகமா என ஆய்வு செய்தனர்.
ஆய்வில் அது உண்மையான புலி நகம் எனக் கண்டறிந்த வனத்துறையினர் சந்தோஷை கைது செய்துள்ளனர். கன்னடத்தில் பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ அக்டோபர் 8ஆம் தேதி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய சில தினங்களுக்குப் பின்பே வர்த்தூர் சந்தோஷ் பின்னர் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக நுழைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.