மரத்திலேயே உயிரிழந்த நபர்
வீடு ஒன்றில் தேங்காய் பறிக்க சென்ற நபர் ஒருவர் தென்னை மரத்தின் நடுப்பகுதியில் சாய்ந்திருந்த மற்றுமொரு மரத்தின் கிளையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
ஹொரணை, வெலிகல திப்பொதுகொட பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்து.
மூன்று பிள்ளைகளின் தந்தையான 39 வயதுடைய சஞ்சீவ பிரியங்கர என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வேலைக்காக தேங்காய் உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உயிரிழந்த நபர், இன்று (20) காலை வீடொன்றில் தேங்காய் பறிக்கச் சென்ற போதே இந்தச் சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார்.
சம்பவத்தை கண்ட பிரதேசவாசிகள் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு தகவல் வழங்கியதையடுத்து, ஹொரணை திடீர் மரண விசாரணை அதிகாரி சுமேதா குணவர்தன மற்றும் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், ஹொரணை தீயணைப்பு திணைக்கள அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு மரத்திலிருந்து இறந்தவரின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலம் சட்ட வைத்திய பணிகளுக்காக ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரண பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.