இலங்கையில் நீதி மரணித்து விட்டது – து.ரவிகரன் கவலை
இலங்கையில் நீதி மரணித்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது தள்ளாடிக்கொண்டிருக்கின்றதோ என்ற சந்தேகம் எழுகின்றது என்று முன்னால் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலத்திற்கு முன்பாக முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு நீதி கோரி முல்லைத்தீவு இளைஞர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாக இருந்த ரி.சரவணராஜா அவர்களுக்கு கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்,அச்சுறுத்தல்களுக்கு நீதி வேண்டி தொடர் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன
கொழும்பில் நீதிமன்றத்திற்கு முன்பாக சட்டத்தரணிகள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றார்கள் இளைஞர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது பல இடங்களில் பல கிராமங்களில் சென்று புலனாய்வுத்துறையினர் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளார்கள். இதனால் அச்சத்தால் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை இலங்கையில் நீதி இறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும் மாவட்டத்தில் மட்டுமல்ல நாட்டில் கசிப்பு,கஞ்சா பலவாறான துன்பப்பட்டுக்கொண்டிருக்கும் மக்களிடத்தில் இவ்வாறான கசிப்பு கஞ்சா பாவனை நடந்து கொண்டிருக்கும் போது நீதித்துறையும் தள்ளாட்டத்திற்கு உள்ளாகின்றதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.
இப்படியான சாட்டுபோக்கு சொல்லாமல் உண்மையான நீதியினை வழங்கவேண்டும் என்றால் சரவணராஜா அவர்களின் இந்த நடவடிக்கைக்கு சரியான முறையில் இலங்கையில் உள்ள பக்கச்சார்பு இல்லாதவர்கள் ஒன்றிணைந்து நியாயமான தீர்வு திட்டத்தினை தரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.