இந்தியாவை அடுத்து மேலும் சில நாடுகளில் பரவிய நிபா வைரஸ்
இந்தியாவில் தொடங்கிய நிபா வைரஸ், தற்போது பங்களாதேஷ், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் பரவியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிபா என்பது வௌவால்கள் மற்றும் பன்றிகளிடமிருந்து மனிதர்களை பாதித்து பின்னர் மனிதர்களிடையே பரவும் வைரஸ் ஆகும்.
அதிக காய்ச்சல், வாந்தி, சுவாச தொற்று போன்றவை இதன் அறிகுறிகளாகும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு உடல்நிலை மோசமடைந்தால் அது மூளை வீக்கமாக உருவாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
நிபா வைரஸ் முதன்முதலில் மலேசியாவில் 1999 ஆம் ஆண்டு பன்றி பண்ணையில் கண்டறியப்பட்டது. இருப்பினும், 1999 முதல், மலேசியாவில் நிபாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்படவில்லை.
இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருந்து நிபா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கேரளாவில் இதுவரை 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் வைரஸ் பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடத்தப்படும் என்று கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. ‘நிபா’ என்பது மனிதர்களிடையே மிக வேகமாக பரவும் வைரஸ் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.