கிரீஸில் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு
கிரீஸில் செவ்வாய்க்கிழமை நடந்த ரயில் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது என்று பிபிசியிடம் மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விசாரணையில் பணிபுரியும் பத்து மரண விசாரணை அதிகாரிகளில் ஒருவரான Eleni Zaggelidou, 57 சிதைந்த உடல்களில் இருந்து DNA மாதிரிகள் எடுக்கப்பட்டதாக கூறினார்.
இதற்கிடையில், 2000களில் கிரேக்கத்தின் பொருளாதார நெருக்கடியின் போது சிக்கன நடவடிக்கைகள் ரயில்வேயில் முதலீடு இல்லாததற்கு பங்களித்ததாக அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறினார்.
பேரிடரைத் தொடர்ந்து, அரசு புறக்கணிப்பைக் கண்டித்து ரயில் ஊழியர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏதென்ஸ் மற்றும் தெசலோனிகியில் 2,000க்கும் மேற்பட்டோர் இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். செவ்வாய்கிழமை லாரிசா நகருக்கு அருகே நடந்த விபத்தையடுத்து அதிர்ச்சியடைந்தனர்.
கிரேக்க ரயில்வேயின் நிலைமைகளை மேம்படுத்த எதுவும் செய்யாத நிறுவனம், அரசாங்கம் மற்றும் கடந்த கால அரசாங்கங்கள் மீது நாங்கள் கோபமாக உள்ளோம் என்று ஏதென்ஸில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் இன்னும் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி வருகின்றனர். இது மிகவும் கடினமான தருணம், என்று மீட்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
செவ்வாய்கிழமை நள்ளிரவிற்கு முன்னதாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. 350 பேரை ஏற்றிச் சென்ற பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் இரண்டும் ஒரே பாதையில் சென்று மோதி விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.