ஈரானில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அச்சம்!
ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 இந்திய மாலுமிகளின் நிலை குறித்து அவர்களின் குடும்பத்தினர் ஆழ்ந்த கவலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஈரானில் தற்போது நிலவும் புவிசார் அரசியல் பதற்றங்களால் அவர்கள் மீளவும் வீடு வந்து சேர்வார்களா என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 8 ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து ஈரானிய அதிகாரிகள் எம்டி வேலியண்ட் ரோர் (MT Valiant Roar) என்ற எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றினர்.
துபாயை தளமாகக் கொண்ட பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சியால் (LLC) இயக்கப்படும் அந்தக் கப்பலில் 6,000 மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இருப்பினும் குறித்த நிறுவனம் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.
16 இந்தியர்களைத் தவிர, குழுவினரில் பங்களாதேஷ் மற்றும் இலங்கையைச் சேர்ந்த தலா ஒருவர் உள்ளனர்.
இந்நிலையில் கப்பலில் இருந்த மாலுமிகளின் உறவினர்கள் இந்தியாவின் உச்சநீதிமன்றத்தை அணுகி , தூதரக அணுகலைப் பெறவும், அவர்கள் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் அரசாங்கத்திற்கு அவசர உத்தரவுகளை பிறப்பிக்குமாறு கோரியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் புதிய ஆவணங்களை சமர்ப்பித்துள்ளது.
அதில் இந்திய பணியாளர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டு ஈரானில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர், மற்றவர்கள் கப்பலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரை சந்திப்பதற்கான அணுகலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. “ஈரானிய கடற்படை/வழக்கறிஞர் அலுவலகத்திலிருந்து தேவையான அனுமதிகள் கிடைத்தவுடன், கப்பலில் உள்ள ஆறு இந்திய மாலுமிகளை அணுக ஈரானிய தரப்பு உதவும் என்று இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.





