உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் பணம்: சத்திய கடதாசி வழங்க தயாராகும் நாமல்!
“ ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டதாகக் கூறப்படும் டொலர்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கு இதுவே சரியான தருணமாகும்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு தேவைப்படும் பட்சத்தில் சத்திய கடதாசியை வழங்குவதற்குகூட நான் தயாராகவே இருக்கின்றேன் எனவும் அவர் கூறியுள்ளார்.
“ராஜபக்சக்கள் வெளிநாடுகளில் டொலர்களை பதுக்கியுள்ளனர் என தற்போதைய ஆட்சியாளர்களால் அன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அந்த டொலர்களை நாட்டுக்கு கொண்டுவந்தால் நல்லது. அதற்கு அரசாங்கத்தக்கு தேவைப்படும் சகல ஒத்துழைப்பை வழங்குவதற்கு நாம் தயார்.” எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டர்.
தாங்கள் வெளிநாடுகளில் பணம் பதுக்கவில்லை என்பதையும், அவ்வாறு பதுக்கி வைத்திருந்தால் அவற்றை கொண்டுவருமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையிலேயே நாமல் மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, இவ்விடயம் தொடர்பில் தங்கள் குடும்பத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல்போனால் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும் என இதற்கு முன்னர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





