தென்சீனக் கடற்பகுதியில் பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய சீன விமானப் படைகள்!
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடற்பகுதியில் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பிலிப்பைன்ஸ் விமானத்தை அச்சுறுத்தும் வகையில் சீன படைகள் செயற்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த வான்பரப்பில் சீன விமானப்படைகள் அச்சுறுத்தும் வகையில் பயணங்களை மேற்கொண்டதாக பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனா ஆக்கிரமித்துள்ள சுபி ரீஃபில் (Subi Reef) இருந்து பயணித்த விமானங்கள் பிலிப்பைன்ஸின் மீன்வளப் பணியகத்தின் செஸ்னா கிராண்ட் கேரவன் Cessna Grand Caravan aircraft) விமானத்தை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் குறித்து சீன அதிகாரிகள் உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
உலகளாவிய வர்த்தகப் பாதையான தென் சீனக் கடல் முழுவதையும் பெய்ஜிங் உரிமை கோரிவருகின்ற நிலையில் பல சந்தர்ப்பங்களில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.





