”இது ஜனநாயகம், முடியாட்சி அல்ல” – ட்ரம்பின் கொள்கைக்கு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) கொள்கைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
நியூயார்க் (New York), வாஷிங்டன் டி.சி (Washington DC), சிகாகோ (Chicago), மியாமி (Miami) மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் (Los Angeles) உட்பட அமெரிக்கா முழுவதிலும் உள்ள பல மாநிலங்களில் மக்கள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
நியூயார்க் நகரத்தின் சின்னமான டைம்ஸ் சதுக்கத்தில் ( New York City’s iconic Times Square) நேற்று நடந்த பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ட்ரம்பின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் இது ஜனநாயக நாடு, முடியாட்சி அல்ல என்றும், அரசியல் அமைப்பு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு உரியது அல்ல என்ற பதாகைகளையும் மக்கள் தாங்கியிருந்தனர்.
இதற்கிடையே ட்ரம்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களை அமெரிக்காவின் வெறுப்பு பேரணி என்று விமர்சித்துள்ளனர்.
நகரம் முழுவதிலும் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டதுடன், யாரும் கைது செய்யப்படவில்லை எனவும், போராட்டம் அமைதியாக இடம்பெற்றதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ட்ரம்ப் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து அதிகாரம் பற்றிய விரிவான பார்வையை கொண்டுள்ளார். இது உலக நாடுகளில் பொருளாதார ரீதியாக பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தியது.
குறிப்பாக காங்கிரஸ் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிதியைத் தடுக்கவும், பிற நாடுகள் மீது கடுமையான வரிகளை அறிமுகப்படுத்தவும், மாநில ஆளுநர்களின் ஆட்சேபனைகளை மீறி நகரங்களுக்கு தேசிய பாதுகாப்புப் படைகளை அனுப்பவும் நிர்வாக உத்தரவுகளைப் பயன்படுத்துகிறார். இது மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.