மத்திய காஸாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு 17 பேர் பலி!
இஸ்ரேலிய ராணுவத்தினர் ஆகஸ்ட் 17ஆம் திகதி மத்திய காஸாவில் உள்ள சவேடா நகரத்தில் நடத்திய தாக்குதலில் குறைந்தது 17 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.உயிரிழந்தவர்களில் பெரும்பாலனவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் 8 குழந்தைகளும் 4 பெண்களும் அடங்குவர் என்று காஸா அதிகாரிகள் கூறினர்.
ஹமாஸ் படையினர் அந்தப் பகுதியில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அங்குள்ள மக்கள் வேறு இடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் ராணுவத்தினர் கட்டளையிட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான இடத்தில் போராளிகள் நடவடிக்கை இல்லாத இடம் என்று காஸா தரப்பு கூறுகிறது. ஆனால் இஸ்ரேலிய ராணுவம் அதை மறுத்துள்ளது.தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது ஏவுகணைகள் பாய்ச்சப்பட்டதாக அது கூறியது.
இதற்கிடையே சனிக்கிழமை பிற்பகல் மத்திய காஸாவில் சாலையோரம் பதுக்கி வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.மேலும், மேற்கு கரையில் இஸ்ரேல் ஆகாயத் தாக்குதல் நடத்தியது. அதில் இரண்டு மூத்த ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேல் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காஸா, மேற்கு கரையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
பிளிங்கன் திங்கட்கிழமை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவை சந்திக்கவுள்ளார். அரசதந்திர முயற்சியின் மூலம் இஸ்ரேலுக்கும் காஸாவுக்கு இடையே நடக்கும் போரை நிறுத்த பிளிங்கன் நடவடிக்கை எடுப்பார் என்று கூறப்படுகிறது.
காஸா மீதான போரை நிறுத்தும் பேச்சுவார்த்தை அடுத்த வாரம் தோஹாவில் நடக்கவுள்ளது. அதற்கு அமெரிக்கா, கத்தார், எகிப்து நாடுகள் ஏற்பாடு செய்துள்ளன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலுக்குள் சென்று தாக்குதல் நடத்தினர். அதில் கிட்டத்தட்ட 1,200 பேர் கொல்லப்பட்டனர்.அதற்கு காஸாமீது பதில் தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் இதுவரை 40,000க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை கொன்றுள்ளது. பத்து மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தும் இந்த போரால் காஸாவின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.