“இந்திய தேர்தல் விவகாரம்” ரஷ்யா குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
அமெரிக்க அரசின் கீழ் இயங்கும் சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் என்ற அமைப்பு அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையில், இந்தியா உள்ளிட்ட 11 நாடுகளில் மத சுதந்திரத்தின் நிலையை கண்காணிக்க வேண்டும் எனக்கூறியிருந்தது.
இந்த நிலையில்,இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமெரிக்கா கூறி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு அரசியல் சூழ்நிலையை சமநிலைப்படுத்தாமல் தேர்தலை சிக்கலாக்குவதே அமெரிக்காவின் நோக்கமாக உள்ளது. இந்திய உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை அந்நாட்டின் அறிக்கை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது” என்று ரஷிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகாரோவா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமெரிக்கா தலையிடுவதாக ரஷ்யா முன்வைத்த குற்றச்சாட்டுகளை அமெரிக்கா மறுத்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர், “நிச்சயமாக இல்லை. நாங்கள் இந்திய மக்களவை தேர்தலில் தலையிடவில்லை. அது இந்திய மக்கள் எடுக்க வேண்டிய முடிவு. இந்தியா மட்டுமல்ல, உலகின் எந்த நாட்டு தேர்தல் விவகாரத்திலும் நாங்கள் தலையிடுவதில்லை” என்றார்.