வீட்டில் வன்முறை கலந்த கண்டிப்பால் 400 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு – UNICEF
ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள கிட்டத்தட்ட 400 மில்லியன் சிறுவர்கள் வீட்டில் வன்முறை கலந்த கண்டிப்புக்கு ஆளாவதாக ஐக்கிய நாட்டு சபையின் சிறுவர் நிதி (யுனிசெஃப்) தெரிவித்துள்ளது.
யுனிசெஃப் திங்கட்கிழமையன்று (ஜூன் 10) இத்தகவலை வெளியிட்டது. இதன்படி உலகளவில் அந்த வயதுப் பிரிவைச் சேர்ந்த சுமார் 60 விழுக்காட்டுச் சிறுவர்கள் வீட்டில் வன்முறையால் கண்டிக்கப்படுகின்றனர் அல்லது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கண்டிப்பு நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர்.
2010ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 100 நாடுகளிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு யுனிசெஃப் இந்தக் கணிப்புகளை வெளியிட்டது. உடல்ரீதியாக வன்முறை கலந்த கண்டிப்பு நடவடிக்கைகள், மனதளவில் நெருக்குதல் அளிக்கும் நடவடிக்கைகள் ஆகிய இரு வகை கண்டிப்பு முறைகளும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
‘முட்டாள்’, ‘சோம்பேறி’ போன்ற வார்த்தைகளை உரக்கச் சொல்லி பிள்ளைகளை அதட்டுவது போன்ற செயல்களை மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கண்டிப்பு நடவடிக்கைகளாக யுனிசெஃப் வகைப்படுத்துகிறது. காயம் ஏற்படுத்தாமல் வலியை மட்டும் ஏற்படுத்தும் விதம் பிள்ளைகளை அடிப்பது, குலுக்குவது போன்றவை வன்முறை கலந்த கண்டிப்பு நடவடிக்கைகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
சம்பந்தப்பட்ட சுமார் 400 மில்லியன் சிறுவர்களில் கிட்டத்தட்ட 330 மில்லியன் சிறுவர்கள் உடல்ரீதியான தண்டனைகளுக்கு ஆளாவதாக யுனிசெஃப் குறிப்பிட்டது.
பிள்ளைகளை உடல்ரீதியாகக் கண்டிப்பதை அதிக நாடுகள் தடை செய்து வருகின்றன. இருந்தாலும் ஐந்து வயதுக்குக்கீழ் உள்ள ஏறத்தாழ 500 மில்லியன் சிறுவர்கள் அத்தகைய கண்டிப்பு நடவடிக்கைகளிலிருந்து சட்டரீதியாக பாதுகாக்கப்படுவதில்லை.
பிள்ளைகளை சரியான முறையில் நல்வழிப்படுத்த அவர்களுக்கு உடல்ரீதியான தண்டனைகளை வழங்குவது அவசியம் என்று பெரியவர்கள் நால்வரில் ஒருவராவது கருத்து தெரிவிப்பதாக யுனிசெஃப் கூறியது.