ஆபிரிக்க நாடுகளுடனான இலங்கையின் வணிக நடக்கடிகைகளை விரிவுபடுத்த தீர்மானம்.
வெளிவிவகார அமைச்சின் பொருளாதார இராஜதந்திர செயற்திட்டத்தின் ஓரங்கமாக ஆபிரிக்க கண்டத்தில் இலங்கையின் நிலவுகையை விரிவுபடுத்துவதை முன்னிறுத்திய வணிகப்பேரவையின் கூட்டம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் தலைமையில் வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆடையுற்பத்தி, மருந்துப்பொருள் உற்பத்தி, கட்டுமானம், நிதி, புதுப்பிக்கத்தக்க சக்திவலு, மட்பாண்ட உற்பத்தி என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு துறைசார்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்ட வணிகங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
ஆபிரிக்காவை பாருங்கள் செயற்திட்டத்தின் தொடர்ச்சியாகவே இந்தக்கூட்டம் ஒழுங்குசெய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, மீட்சியடைவதை முன்னிறுத்திய அரசாங்கத்தின் கொள்கை, இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரத்திட்டத்தை ஆபிரிக்காவில் விரிவுபடுத்துதல், பொருளாதார மூலோபாயத்தைக் கடைப்பிடித்தல் ஆகியவற்றின் அவசியம் தொடர்பில் வலியுறுத்தினார்.