இலங்கையில் அதிகரிக்கும் மாபியாக்களின் செயற்பாடு!
இலங்கையில் நகை செய்யும் இடங்களில் உள்ள தங்கக்கழிவுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக இலங்கையின் மாபொல பகுதியினை மையமாகக்கொண்டு இந்த வர்த்தக நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை அரசாங்கத்தின் முறையான அனுமதி இன்றி சட்டவிரோதமான முறையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இவ்வாறான வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் இந்தியர்களை இலங்கையினைச் சேர்ந்த சிலர் அச்சுறுத்துவதாகவும், அவர்களிடம் பெருந்தொகை பணத்தினை கப்பமாக கோருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இதுகுறித்து இலங்கைக்கான இந்திய தூதரகத்திலும், பொலிஸ் நிலையங்களிலும், அச்சுறுத்தலுக்குள்ளான இந்தியர்கள் முறைப்பாடு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக தற்போது, இலங்கை அரசாங்கத்தின் உரிய அனுமதி பத்திரத்துடன், தங்கக்கழிவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குரிய நடவடிக்கைகளை இந்தியர்கள் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மாபியாக்களின் தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாகவே அவர்கள் இந்த முடிவிற்கு வந்துள்ளதாகவும், இதுதொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு பிரஜைகளை அச்சுறுத்தி கப்பம் பெற முனைகின்றவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கையினை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் இலங்கைக்கு வருகை தரும் இந்தியர்கள் கோரியுள்ளனர்.