முடக்கப்பட்ட ரஷ்ய பணத்தை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியத்திடம் செலென்ஸ்கி அவசர கோரிக்கை
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி, ஐரோப்பிய ஒன்றிய (EU) தலைவர்களிடம் அவசரமாக பல பில்லியன் யூரோ கடனை வழங்குமாறு கோரியுள்ளார்.
இந்த கடன், ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ரஷ்யாவின் பணத்திலிருந்து வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்
அவசர உச்சிமாநாட்டிலேயே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
உக்ரைனுக்கு தற்போது கடுமையான நிதி சிக்கல் காணப்படுகிறது. வரும் வசந்த காலத்துக்குள் நிதி உதவி கிடைக்கவில்லை என்றால், ட்ரோன் உற்பத்தி உள்ளிட்ட இராணுவ நடவடிக்கைகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என்று செலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
ரஷ்யாவுக்குச் சொந்தமான சுமார் €210 பில்லியன் மதிப்புள்ள சொத்துகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான பணம் பெல்ஜியத்தில் உள்ள “யூரோக்ளியர்” (Euroclear) என்ற நிறுவனத்தில் உள்ளது.
இதுவரை பெல்ஜியம் உள்ளிட்ட சில நாடுகள், இந்த பணத்தை “இழப்பீடு கடன்” (reparations loan) ஆக பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
ஆனால் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், “இந்த நேரத்தில் ஐரோப்பிய நாடுகள் தைரியமான முடிவை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அந்த பணத்தை பயன்படுத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்தை எச்சரித்துள்ளது.




