போலந்தில் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிய இளைஞர் கைது!
போலந்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றதாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கிறிஸ்துமஸ் சந்தையில் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
19 வயதான மேடியூஸ் (Mateusz) என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் கிழக்கு போலந்தின் லுப்ளினில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து அவரை கைது செய்துள்ளதாகவும், அவரிடம் இருந்து இஸ்லாம் தொடர்பான பொருட்கள்” பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
லுப்ளின் கத்தோலிக்க பல்கலைக்கழக மாணவரான குறித்த இளைஞர் வெடிபொருட்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், ஒரு பயங்கரவாத அமைப்பில் சேர திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
“அந்த நபர் இஸ்லாத்தால் மிகவும் ஈர்க்கப்பட்டார், இஸ்லாமிய அரசுடன் தொடர்புகளை ஏற்படுத்த முயன்றார், மேலும் கிறிஸ்துமஸ் சந்தையின் போது போலந்தில் உள்ள ஒரு நகரத்தில் தாக்குதல் நடத்த தயாராகி வந்துள்ளார் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அத்துடன் பலரின் மரணம் அல்லது கடுமையான காயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்துவதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக” அரசு வழக்கறிஞர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அதிகாரிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை தொடர்ந்து அவரை 03 மாதம் சிறையில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.





