நான்கு பிள்ளைகளை கொன்றதாக கைதான தாய்: 20 வருடங்களின் பின் விடுதலை!
தனது இரண்டு மகன்மார் மற்றும் இரண்டு மகள்மார் ஆகியோரை கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 20 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பெண் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தடயவியல் விஞ்ஞானிகள், குறித்த குழந்தைகள் நால்வரும் இயற்கையாக மரணித்திருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.
இதனையடுத்தே, குற்றம் சுமத்தப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று வந்த 55 வயதை தற்போது எட்டியுள்ள கத்லீன் போஃல்பிக் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த தண்டனை தீர்ப்பு அவுஸ்திரேலிய நீதித்துறைக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழுக்கு என தற்போது விபரிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இன்று நியூ சவுத் வேல்ஸ் சட்டமா அதிபர் உடனடியாக அவரை விடுதலை செய்வதற்கான சட்ட ஆவணத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
இதேவேளை, தமது தண்டனை தீர்ப்புக்கு எதிராக குறித்த பெண் நீதிமன்றம் சென்றால் அவருக்கு பெருந்தொகையான டொலர்களை நட்டயீடாக அரசாங்கம் வழங்க வேண்டியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.