வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – அஜித் பி பெரேரா!
பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீன் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் எந்த அரசாங்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று (02.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், தற்போது அரசாங்கம் தாஜூதீன் கொலைக்கு முன்னுரிமையளித்து பேசிக்கொண்டிருக்கிறது. இது சிறந்த விடயமாகும். ராஜபக்ஷ ஆட்சியின் கீழ் அரசியல் தேவைக்காக அரசியல் தொடர்புகளுடனேயே இந்தக் கொலை இடம்பெற்றது. வரலாறு மாறினாலும் தேர்தலில் வெற்றி தோல்விகள் ஏற்பட்டாலும் உண்மையை தொடர்ந்தும் மறைக்க முடியாது.
தாஜூதீன் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டார். அந்தக் கொலையை மறைப்பதற்காக அரச சட்ட மருத்துவ அதிகாரி, சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் மட்டத்திலிருந்த அதிகாரிகள் இணைந்து சதித்திட்டம் தீட்டி அதனை திடீர் விபத்தாகக் காண்பித்தனர்.
அன்று அதற்காக நாம் குரல் கொடுத்தோம். நல்லாட்சி அரசாங்கம் மீண்டும் இது தொடர்பில் நியாயமான விசாரணைகளை முன்னெடுத்து பிரேத பரிசோதனை செய்து தாஜூதீன் கொலை செய்யப்பட்டிருப்பதாக வெளிப்படுத்தியது.
ஆனாலும் இந்தக் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் போனது. கொலையாளிகள் யார் என்பதை பொதுவாக அனைவரும் அறிந்திருந்தாலும், சட்டரீதியாக அவர்கள் யார் என்பது அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

தாஜூதீன் கொலையுடன் தொடர்புடையவர்கள் யார் என்பதை சாட்சியுடன் நிரூபித்தால் அது மிகவும் பெறுமதிமிக்க ஒரு விடயமாகும். எந்த அரசாங்கமானாலும் இந்தக் கொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அந்த வரலாற்றை அழிக்கவும் முடியாது. இந்தக் கொலையுடன் தொடர்புடைய சாட்சிகளை மறைத்தவர்கள் இன்று உயிருடன் இல்லை. எனினும் கொலையாளிகள் உயிருடன் இருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியது தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த கொலை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொலை தொடர்பான வரலாறு,
2012ஆம் ஆண்டில், கொழும்பு நாரஹேன்பிட்டியில் வாகனத்தில் சென்ற வேளையில், வசீம் தாஜுதீன் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இக்கொலை தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என தாஜுதீனின் உறவினர்கள் குற்றச்சாட்டிவந்தனர்.
அந்த நிலையில் புதிய அரசாங்கம் தற்போதைய விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





