இந்தோனேசியாவில் 5 முறை வெடித்துச் சிதறிய எரிமலை – அச்சத்தில் மக்கள்
இந்தோனேசியாவின் Sulawesi தீவில் எரிமலை 5 முறை வெடித்துச் சிதறியதால் மக்கள் பதற்றமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Ruang எரிமலை இரண்டு கிலோமீட்டர் உயரத்துக்கு மேல் புகையைக் கக்கியதால் விழிப்பு நிலை உச்சத்துக்கு உயர்த்தப்பட்டது. சுனாமி எச்சரிக்கையைத் தொடர்ந்து சுமார் 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
எரிமலையின் ஒரு பகுதி நிலைகுலைந்து கடலில் விழலாம், பெரிய அளவில் அலைகள் எழலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை உயிருடற்சேதம் குறித்துத் தகவல் இல்லை.
அந்த வட்டாரம் கடும் புகையால் சூழ்ந்துள்ளது. சுலாவெசித் தீவின் மனாடோ (Manado) அனைத்துலக விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
எரிமலையின் 6 கிலோமீட்டர் சுற்றளவில் நடமாட வேண்டாம் என்று குடியிருப்பாளர்களுக்கும், சுற்றுப் பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களுக்குப் பிறகு எரிமலையின் குமுறல் அதிகரித்துள்ளது.