பிரித்தானிய முதலீடுகளுக்குப் புதிய வழிகாட்டி: ‘இலக்கு சார்ந்த ஆதரவு’ திட்டம் அறிவிப்பு.
பிரித்தானியாவில் முதலீடுகள் மற்றும் ஓய்வூதியங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, நிதி ஒழுங்குபடுத்தும் ஆணையம் (FCA) ஒரு புதிய ‘இலக்கு சார்ந்த ஆதரவு’ (Targeted Support) திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது அடுத்த ஆண்டு ஏப்ரல் 2026 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்தத் திட்டத்தின்கீழ், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் போன்ற அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள், ஒரே மாதிரியான குழுக்களின் அடிப்படையில் முதலீடு மற்றும் ஓய்வூதிய பரிந்துரைகளை வழங்க அனுமதிக்கப்படும்.
இது தனிப்பட்ட ஆலோசனைக்கும் பொதுவான வழிகாட்டுதலுக்கும் இடையேயான இடைவெளியைக் குறைக்கும் என FCA தெரிவித்துள்ளது. இது ஒரு “விளையாட்டை மாற்றும் நடவடிக்கை” (Game Changing) என்று FCA துணை தலைமை நிர்வாகி சாரா பிரிட்சார்ட் கூறியுள்ளார்.
சுமார் 7 மில்லியன் பிரித்தானியர்கள் முதலீட்டின் மூலம் சிறந்த வருமானத்தைப் பெற வாய்ப்புள்ள நிலையில், இந்தத் திட்டம் மில்லியன் கணக்கானோர் சிறந்த நிதி முடிவுகளை எடுக்க உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.





