அமெரிக்காவின் டென்னிஸ் நகரை புரட்டிப்போட்ட சூறாவளி;இருளில் மூழ்கிய நகரம்
அமெரிக்காவின் டென்னிஸி நகரைத் தாக்கிய சூறாவளியால், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதோடு, 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் நிலத்தில் தோன்றி நிலத்திலேயே பயணிக்கும் டொர்னாடோ எனப்படும் சூறாவளிகள் உருவாவது வழக்கம். அத்தகைய ஒரு சூறாவளி டென்னிஸி மாகாணத்தில் நேற்று உருவானது. இந்த சூறாவளி அம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் வழியாக கடந்த போது, கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
சூறாவளி மின்கம்பங்களை சேதப்படுத்தியதால் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
நகரப்பகுதிகள் மட்டுமின்றி, புறநகர்ப்பகுதிகளும் இந்த சூறாவளியால் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன. இந்த சூறாவளி காரணமாக வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்ததில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் காயமடைந்த 23 பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுமார் 80 ஆயிரம் பேர் மின்சாரமின்றி தவிப்பதாகவும், மின்சார விநியோகத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.