சிங்கப்பூர் அடுக்குமாடி குடியிருப்பில் பரபரப்பை ஏற்படுத்திய தீவிபத்து!
சிங்கப்பூரில் உள்ள Bedok Reservoir Road அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
நேற்று அதிகாலை 03.40 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இது குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களுடன் விரைந்து வந்தனர்.
அடுக்குமாடிக் குடியிருப்பின் ஏழாவது மாடியில் உள்ள வீட்டில் தீ கொளுந்து விட்டு எரிந்ததைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அங்கு சென்று, வீட்டின் படுக்கையறையில் ஏற்பட்டத் தீயை தண்ணீரைப் பீய்ச்சியடித்து, முழுவதுமாக அணைத்தனர். எனினும், அந்த அறையில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமானது.
தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் இருந்து இரண்டு பேர் தாமாகவே வெளியேறினர். இதில், சிகிச்சைக்காக ஒருவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து சுமார் 90 குடியிருப்பாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், படுக்கையறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்து காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது