டென்மார்க் நாட்டில் தொடரும் பதற்றம் – ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வழங்கும் சுவீடன்

டென்மார்க் நாட்டிற்ல் தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதால் ட்ரோன் எதிர்ப்பு சாதனங்களை வழங்க சுவீடன் முன்வந்துள்ளது.
நாட்டின் சிவில் விமான நிலையங்கள் மற்றும் படைத் தளங்களுக்கு மேலே சட்டவிரோதமாகப் பறக்கின்ற ட்ரோன்களால் டென்மார்க் குழப்பமடைந்திருக்கிறது.
நாட்டு மக்கள் மத்தியில் தேசிய பாதுகாப்புப் பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. வெள்ளிக்கிழமை இரவு டெனிஷ் றோயல் விமானப் படையின் மிகப் பெரிய கார்ப் வான் தளம் (Karup Air Base) உட்பட பல பாதுகாப்பு நிலைகள் மீதும் ட்ரோன்கள் சஞ்சரித்தமை பற்றிய செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
நாட்டின் தேசிய பாதுகாப்புக் கட்டளைப் பீடத்தின் ஒரு பகுதி இங்கேயே இயங்குகிறது. தலைநகர விமான நிலையம் உட்பட நாட்டின் சகல வான் தளங்கள் மீதும் பல நூற்றுக் கணக்கான ட்ரோன்கள் தென்பட்டிருக்கின்றன.
ஆனால் நாட்டின் பாதுகாப்புத் துறையினர் இதுவரை இந்தச் செய்தியை வரையும் வரை அவற்றில் ஒன்றைக் கூடக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவோ அல்லது சுட்டு வீழ்த்தவோ இல்லை.
தரையில் சிவிலியன்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்பைக் கவனத்தில் கொள்வதாலேயே ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்த முடிவு செய்யப்படவில்லை என்று பாதுகாப்புப் படைகள் தரப்பில் திரும்பத் திரும்பத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் நேட்டோ என்கின்ற வட அத்திலாந்திக் கூட்டணியை உருவாக்கிய நாடுகளில் ஒன்றான டென்மார்க் தன்வசம் பலமான வான்பாதுகாப்புப் போர்ச் சாதனங்களை வைத்துள்ள போதிலும் நவீன சிறிய ட்ரோன்களை இனங்கண்டு தடுக்கின்ற, அவற்றைச் செயலிழக்கச் செய்கின்ற இராணுவ சாதனங்கள் அந்நாட்டிடம் இல்லை என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.