இலங்கை – பாதுகாப்பு பிரச்சினையை எதிர்நோக்கும் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய லேண்ட் ரோவர் வாகனம் இன்று (03.10) அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதனால் அவர் பாதுகாப்பு பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி உரிமைகள் ரத்துச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம், ஓய்வுபெற்ற ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட போக்குவரத்து வசதிகள், பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் பிற சிறப்பு உரிமைகள் நீக்கப்பட்டுள்ளன, மேலும் அரசாங்க வாகனங்களை ஒப்படைக்கும் செயல்முறையும் நடந்து வருகிறது.
இதற்கமைய கடந்த 2015 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குண்டு துளைக்காத கார் மற்றும் டொயோட்டா லேண்ட் ரோவர் ஆகிய வாகனங்கள் வழங்கப்பட்டன. இந்த இரண்டு வாகனங்களும் அரசாங்க சொத்தாகக் கருதப்படுகின்றது. மேலும் அவை சட்டத்தின் கீழ் ஒப்படைக்கப்பட உள்ளன.
இந்நிலையில் குண்டு துளைக்காத கார் பழுதுபார்ப்பதற்காக மாத்தறையில் உள்ள ஒரு பழுதுபார்ப்பு இடத்தில் (கேரேஜில்) நிறுத்தப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. அத்துடன் லேண்ட் ரோவர் வாகனம் இன்று (03.10) அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
அரசாங்க தகவல் துறையின் அறிக்கையின்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை 8 அரசாங்க வாகனங்களை ஒப்படைத்துள்ளார், மேலும் 8 வாகனங்கள் அவரது பயன்பாட்டிற்காக இன்னும் பாவனையில் உள்ளன.
அத்துடன் அவரின் போக்குவரத்துக்காக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இரண்டு ஓட்டுநர்களின் நியமனங்கள் நேற்று முன்தினம் (01) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இவ்விரு வாகனங்களும் ஒப்படைக்கப்பட்ட பிறகு, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகள் பயணிப்பதற்கு கூட வாகனங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக குண்டு துளைக்காத வாகனம் இல்லாததால் பாதுகாப்பு பிரச்சினை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும் தற்போதைய சட்டமூலம் பாதுகாப்புப் பணியாளர்களையும் நீக்குகிறது.
இது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மிக முக்கியமான வாக்குறுதியாகும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக இதுவரை காலமும் முன்னாள் ஜனாதிபதிகள் அனுபவித்துவந்த வரப்பிரசாதங்கள் நீக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் இந்த செயற்திட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





