சிட்னியில் ஒரு குடும்பத்தை கொலை செய்த தென்கொரிய நபருக்கு ஆயுள் தண்டனை!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் 7 வயது மாணவனையும் அவரின் பெற்றோரையும் கொலை செய்த டேக்வாண்டோ (taekwondo) பயிற்றுவிப்பாளருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
நியூ சவுத் வேல்ஸ் உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் நீதிபதி மேற்படி தீர்ப்பளித்தார்.
51 வயதான குவாங் கியுங் யூ (Kwang Kyung Yoo) என அடையாளப்படுத்தப்படும் கொலை குற்றவாளி ஒருபோதும் பிணையில் விடுதலையாக தகுதிப் பெறமாட்டார் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
குறித்த நபர் குடும்பத்தின் நிதி வெற்றிக்காக கொலை குற்றத்தை மேற்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) பெப்ரவரியில் சிறுவனையோ அல்லது அவரது பெற்றோரையோ கொலை செய்ய யூவுக்கு எந்த காரணமும் இல்லை என்று நீதிபதி ஹாரிசன் கூறியுள்ளார்.
(குற்றத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காண்பதை மாநில சட்டம் தடுக்கிறது, எனவே சிறுவனின் பெற்றோரின் பெயரையும் அடையாளப்படுத்த முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது)
மேற்கு சிட்னியில் உள்ள தனது லயன்ஸ் டேக்வாண்டோ (Lion’s Taekwondo) மற்றும் தற்காப்பு கலை அகாடமியில் யூ சிறுவனையும் அவரது 41 வயது தாயையும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
பின்னர் தனது சொகுசு காரில் பயணித்து சிறுவனின் தந்தையையும் கொலை செய்துள்ளார். வீட்டில் நடத்த தாக்குதலில் காயமடைந்த அவர் மருத்துவமனையொன்றுக்கு சென்று சிகிச்சைப் பெற்றுள்ளார். இதன்போது காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.





