வெகுவிரைவில் வரிசை யுகம் தோற்றம் பெறும் : பாட்டலி சம்பிக்க ரணவக்க

பொருளாதார பாதிப்புக்கு தற்காலிக இடைவேளை மாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் வரிசை யுகம் மீண்டும் தோற்றம் பெறும் என பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (7) இடம்பெற்ற சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் உட்பட கைத்தொழில் துறை எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நாடு பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.நாட்டின் தற்போதைய இயல்பு நிலை தற்காலிகமானதே.
வெளிநாட்டு கடன்களை செலுத்த முடியாத காரணத்தால் கடந்த ஆண்டு ஏப்ரல் 12 ஆம் திகதி இலங்கை வங்குரோத்து நிலையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
4.5 பில்லியன் டொலர் அரசமுறை கடன்களை செலுத்துவதை அரசாங்கம் தவிர்த்துள்ளது.தற்போது 3 பில்லியன் டொலர்கள் மாத்திரமே வெளிநாட்டு கையிருப்பில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடிகளுக்கு தற்காலிக இடைவெளி வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான உறுதியாக திட்டத்தை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
தற்போது தேசிய கடன் செலுத்தப்படுகிறது வெளிநாட்டு கடன்கள் செலுத்தப்படுவதில்லை. கடன் மறுசீரமைப்புக்களின் பின்னர் வட்டியுடன் வெளிநாட்டு கடன்களை நிச்சயம் செலுத்த நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.