பூமியை தாக்கவுள்ள சூரிய புயல் – ஏற்படவுள்ள பேரழிவு தொடர்பில் எச்சரிக்கை

பூமியை தாக்கவுள்ள ஆபத்தான சூரிய புயல் தொடர்பில் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேரழிவை ஏற்படுத்தக்கூடிய தீவிரச் சூரியப் புயல்கள் எப்போது பூமியை தாக்கும் என துல்லியமாகக் கணிக்க முடியாத நிலையில் விஞ்ஞானிகள் உள்ளனர்.
இந்த புயல் பூமியை தாக்கும் பட்சத்தில் உலகின் பல பாகங்களில் நீண்ட காலத்திற்கு மின்சாரம் இல்லாத பாரிய நெருக்கடி ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சூரியப் புயல் பூமியை மூன்று அலைகளில் தாக்கும் அபாயம் உள்ளது. முதலில் வரும் மின்காந்த அலை, ஜி.பி.எஸ். மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளைச் சீர்குலைக்கும். அதைத் தொடர்ந்து வரும் இரண்டாவது அலை உயர் ஆற்றல் துகள்கள் செயற்கைக்கோள்களை பாதிப்படையச் செய்யும்.
மூன்றாவது அலை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும். சுமார் 10 முதல் 18 மணி நேரத்திற்குப் பிறகு வரும் கொரோனல் மாஸ் எஜெக்ஷன் (Coronal mass ejection) என்ற பிளாஸ்மா மேகம் ஆகும். இது பூமியின் காந்தப்புலத்துடன் மோதி புவி காந்தப் புயலை ஏற்படுத்தி, மின் கட்டமைப்புகளைச் சீர்குலைக்கும்.
சக்திவாய்ந்த சூரிய புயல் ஏற்பட்டால், அமெரிக்காவில் மட்டும் 20 முதல் 40 மில்லியன் மக்கள் இரண்டு ஆண்டுகள் வரை மின்சாரம் இல்லாமல் இருக்க நேரிடும். அத்துடன் பொருளாதாரச் செலவு 2.6 டிரில்லியன் டொலர் வரை இருக்கும் என 2013ஆம் ஆண்டு வெளியான ஆய்வொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள் மீது 400 சதவீதம் வரை இழுவை அதிகரிக்கக்கூடும் என ஐரோப்பிய விண்வெளி அமைப்பு எச்சரித்துள்ளது.
மேலும், புயலின் போது செயற்கைக்கோள் மோதல்களின் ஆபத்து வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்பதால், டார்ம்ஸ்டாட்டில் உள்ள விண்வெளிப் பாதுகாப்பு மையம் (Space Safety Centre) அவசரத் திட்டங்களை ஒருங்கிணைத்து வருகிறது.
2031இல் ஏவ திட்டமிடப்பட்டுள்ள ‘விஜில் மிஷன்’ (Vigil Mission) மூலம், சூரியன் பூமிக்குத் தெரியும் முன்னரே அதன் நிகழ்வுகளைக் கண்டறிந்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியமான நேர அனுகூலத்தைப் பெற ஐரோப்பிய விண்வெளி அமைப்பு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.