பாராளுமன்றில் பராமரிப்பு பணிப் பெண்களுக்கு பாலியல் துஷ்பிரயோகம்!! விசாரணைகள் ஆரம்பம்
பாராளுமன்றத்தின் பராமரிப்புத் துறையில் பணிப்பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையை நாடாளுமன்றத்தின் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆரம்பித்தார்.
பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீரவின் அறிவித்தலுக்கு அமைய அவர் இந்த முறையான விசாரணைகளை ஆரம்பித்தார்.
சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை அண்மையில் பாராளுமன்றச் செயலாளரிடம் அதன் தலைவர்களால் கையளிக்கப்பட்டது.
அறிக்கையில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் இந்த முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணைகள் பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) தச்சனா ராணி தலைமையிலான மூவர் கொண்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டது.
உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திஸாநாயக்க மற்றும் ஹன்சார்ட் ஆசிரியர் நயனி லொகு கொடிகார ஆகியோர் இதில் உள்ளடங்கிய ஏனைய இரண்டு உறுப்பினர்களாவர்.
இந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக, உதவி பணிப்பெண் மற்றும் நாடாளுமன்ற பராமரிப்பு துறை அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் எமது பாராளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோகணதீரவிடம் வினவிய போது முறையான விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் அதன் பரிந்துரைகளுக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பாராளுமன்றத்தில் இவ்வாறான அநாகரிகமான செயற்பாடுகள் இடம்பெறாதிருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.