என் அம்மாவின் சவப்பெட்டியை அனுப்பி வையுங்கள்!! இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கை பெண்ணின் மகள் உருக்கம்
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களுக்கு மத்தியில் தாதியாக பணியாற்றி கடந்த 7ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த இலங்கையைச் சேர்ந்த அனுலா ஜயதிலகா என்ற பெண் உயிரிழந்தமை நேற்று (17) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
49 வயதான அனுலா இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
அனுலாவின் மரணம் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்னர், இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டாரவுக்கு அவரது மகள் செய்தி அனுப்பியிருந்தார்.
இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அங்குள்ள உணர்ச்சிகரமான விடயங்களை மேற்கோள் காட்டி தனது முகநூல் கணக்கில் சேர்த்திருந்த குறிப்பு இதுவாகும்.
“ஐயா, நான் அனுலாவின் மகள், என் அம்மா இருக்கிறாள் என்று என் இதயம் சொல்கிறது, என் அம்மா நாட்டை விட்டு வெளியேறும்போது எனக்கு 16 வயது, என் வாழ்க்கையில் 10 ஆண்டுகளில் 90 நாட்கள் என் அம்மாவுடன் நெருக்கமாக இருந்தேன்.
என் அம்மா. இந்த சம்பவத்துக்கு முந்தின நாள் இரவு என்னுடன் பேசினார். நான் இருக்கேன், என் அம்மாவுக்கு என் திருமணத்தை அழகா செய்ய வேண்டும் என்று ஆசையா இருந்தது.
அம்மாவுக்காக காத்திருக்கிறேன், அம்மா உயிரிழந்திருந்தால் நான் அவளுடைய இறுதிச் சடங்குகளைச் செய்ய விரும்புகிறேன், அதனால் அவரது சவப்பெட்டியை எனக்காக அனுப்பி வையுங்கள்.” என கூறியுள்ளார்.
மோதல்களுக்கு மத்தியில் உயிரிழந்த அனுலா ஜயதிலவுக்கு அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை வழங்க இஸ்ரேல் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.