சனி கிரகத்தின் நிலவில் உயிர் வாழ முடியும் – விஞ்ஞானிகள் நம்பிக்கை
சனி கிரகத்தின் என்சலடஸ் நிலவில் உயிர் வாழும் வாய்ப்பு அதிகமாக உள்ளதென விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
சூரிய குடும்பத்தில் 6வது கிரகமாக விளங்கும் சனியைச் சுற்றி பல நூறு நிலவுகள் உள்ளன.
என்சலடஸ் என்ற நிலவு அவற்றில் ஒன்றாகும். சுமார் 500 கிலோமீட்டர் பரப்பளவுள்ள இதனை நேரில் காண முடியாத அளவிற்கு சிறியதாக உள்ளதென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலவு சூரியனுக்கு மிகவும் தொலைவில் உள்ளது. இதனால் என்சலடஸ் நிலவில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே இல்லை என கடந்த காலங்களில் கருதப்பட்டது.
ஆனால், அந்த நிலவை மூடியிருக்கும் பனித்தடத்தின் கீழ் ஒரு பெரிய கடல் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த கடலில் உயிரினங்கள் உருவாகத் தேவையான மூலக்கூறுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான காசினி விண்கலம் 2008ஆம் ஆண்டு சனி கிரகத்தை மிக நெருக்கமாகத் தொட்டுச் சென்று, இந்த தகவல்களைச் சேகரித்தது.
அந்த ஆய்வுகளின் முடிவுகள் நேச்சர் அஸ்ட்ரோனாமி என்ற விஞ்ஞான பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
இதில், என்சலடஸ் நிலவின் கடலில் உப்பு, கரியமில வாயு, மீத்தேன் வாயு ஆகியவை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், என்சலடஸில் உயிர் வளரும் சூழ்நிலை இருக்கக்கூடும் எனக் கணிக்கப்படுகிறது.
எனினும் அங்கு உண்மையில் உயிரினங்கள் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க மேலும் ஆய்வுகள் தேவைப்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.





